500 செவிலியர்கள் தேவை என இங்கிலாந்து நாடு கேட்டுள்ளதாகவும், முன்வருபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அனுப்பப்படுவர் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
குவைத், கம்போடியா நாடுகளில் சிக்கித்தவித்து மீட்கப்பட்ட 35 பேர் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “வெளிநாடுகளுக்கு போலி ஏஜெண்டுகளை நம்பி சிக்கித் தவிக்கும் நிலை அதிகம் காணப்படுகிறது. அவ்வாறு சிக்கித் தவிப்பவர்களை உடனுக்குடன் மீட்டு வருகிறோம். 35 தமிழர்கள் குவைத் நாட்டில் கட்டுமானப் பணிக்கு சென்று, உணவு, வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்கள் எந்த நாட்டிற்கு? என்ன வேலைக்காக? யார் நிறுவனத்திற்கு? செல்கிறீர்கள் என்பதை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்துவிட்டுச் சென்றால் அரசு கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும். மாலத்தீவிற்கு சென்று தமிழர்கள் வேலைசெய்யும் இடங்களில் ஆய்வு செய்தோம். ஒப்பந்ததாரர்கள் மூலமாக ஊதியம் வழங்கப்படுகிறதா? என விசாரித்தோம்.
பல்வேறு நாடுகளுக்கு, வேலைக்காக செல்வதற்கு அரசுத் துறை மூலமாக அனுப்பும் பணியும் நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டில் 500 செவிலியர்கள் தேவை என கேட்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு செல்ல விரும்பி முன்வருபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பின் அனுப்பப்படுவர்” என்று தெரிவித்தார்.