நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கி மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 50 மருத்துவ…

நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கி மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 50 மருத்துவ கல்லூரிகள் தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்கள் கிடைக்கும். 2022-2023 கல்வியாண்டுக்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாட்டில் மொத்தம் 654 மருத்துவக் கல்லூரிகளில் 99,763 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. தற்போது மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,07,658 ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் 15 மாநிலங்களில் திறக்கப்படுவதாகவும், இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் தெலங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக 13 புதிய மருத்துவக் கல்லூரிகளும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் தலா ஐந்து புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, குஜராத், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த 50 புதிய மருத்துவ கல்லூரிகளில் 30 அரசு கல்லூரிகளும் மற்றும் 20 தனியார் கல்லூரிகளும் அடங்கும். இதன்மூலம் தற்போது நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கும் பொதுத் தகுதித் தேர்வான நெக்ஸ்ட் தேர்வு முதன்முறையாக 2024-ம் ஆண்டு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் ஆய்வுகளின் போது, பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக  பின்பற்றவில்லை எனக் கூறி நாடு முழுவதும் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் பணியையும் என்எம்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.