டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 பேரும் உயிரிழப்பு; இயக்குநர் ‘ஜேம்ஸ் கேம்ரூன்’ கருத்தால் பரபரப்பு!

டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற டைட்டன் நீர்முழ்கி கப்பல் வெடித்து அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்தை டைட்டானிக் விபத்துடன் ஒப்பிட்டு ஜேம்ஸ் கேம்ரூன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   …

டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற டைட்டன் நீர்முழ்கி கப்பல் வெடித்து அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்தை டைட்டானிக் விபத்துடன் ஒப்பிட்டு ஜேம்ஸ் கேம்ரூன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.            

1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி செளதாம்டன் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் மீது பனிப்பாறைகள் மோதி விபத்து ஏற்பட்டது. சுமார் ஆயிரத்து ஐநூறு பயணிகள் பயணித்த அந்த கப்பல் அடுத்த 5 மணி நேரத்தில் முழுவதுமாக மூழ்கியது. கடலுக்கு அடியில் பொதிந்து கிடக்கும் அக்கப்பலை பார்வையிட பிரிட்டிஷ் கோடீஸ்வர ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், புகழ்பெற்ற பிரெஞ்சு நீச்சல்காரர் பால் ஹென்றி நர்ஜோலெட், பாகிஸ்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத், அவரின் 19 வயது மகன் சுலைமான் தாவூத் ஆகியோர் சென்றனர். நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் OceanGate Expeditions நிறுவனம் இந்த ஐவரையும் கடலுக்குள் அழைத்துச் சென்றது.

டைட்டானிக் கப்பலை தேடி சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த வாரம் காணாமல் போனதாக தகவல் வெளியானது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்த நிலையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதாக அமெரிக்காவின் கடலோர காவல்படை அறிவித்துள்ளது. டைட்டனின் சிதறிய பாகங்கள் கடலுக்கு அடியில் 3800 மீட்டர் ஆழத்தில் இருப்பதை ஆளில்லாத ரோபோடிக் நீர்மூழ்கி கண்டுபிடித்துள்ளது. டைட்டனின் வால் கூம்பு மற்றும் அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகிய இரண்டு சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் எங்கிருக்கின்றன? அதனை மீட்க முடியுமா என்பது குறித்து உறுதியளிக்க முடியாது என அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இருப்பினும் கண்டறியப்பட்டுள்ள நீர் மூழ்கியின் பாகங்கள் கூர்மையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நீர்முழ்கி கப்பல் வெடித்திருக்கும் என்பதை முன்னரே உணர்ந்ததாக டைட்டானிக் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டைட்டானிக் கப்பலை காண இதுவரை 33 முறை ஆழ்கடலுக்கு சென்றுவந்திருப்பதாகவும், தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் டிராக்கிங் டிரான்ஸ்பார்மர் செயலிழந்ததுமே கப்பல் வெடிப்பை உறுதி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கும் டைட்டன் கப்பலின் நிறுவனர், விபத்தை விமர்சிப்பவர்கள் யாரும் கப்பல் உருவாகும் போதோ அல்லது பொறியியல் செயல்முறையின் போது இருக்கவில்லை என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.