கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கல பகுதியிலுள்ள புத்தன் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் பிரதாப் (64). இவரது மனைவி ஷெர்லி (53). இவர்களது இளைய மகன் அகில் (25). மூத்த மகன் நிகில் (28) அவரது மனைவி அபிராமி (24) மற்றும் அவரது 8 மாத குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை வீடு முழுவதும் திடீரெனத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பின்பு வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பச்சிளம் குழந்தை உட்பட 5 பேரும் தீயில் கருகி இறந்த நிலையில், மூத்த மகன் நிகில் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட தீ அணைப்பு துறையினர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையா, உயிரிழப்பா என்ற கோணத்தில் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் தீ பற்றிச் சேதமடைந்திருந்ததால், தீ வீட்டின் வெளியே இருந்து உள்ளே பரவியதா? அல்லது உள்ளே ஏற்பட்ட மின் கசிவால் தீ பற்றிப் பிடித்தனவா என இரண்டாவது நாளாக மின்சார துறை ஆய்வாளர் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.








