மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு – 75 பேர் மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலப்பூர் தாலுகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக…

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலப்பூர் தாலுகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலப்பூர் தாலுகாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன.

இந்த நிலையில், கனமழை காரணமாக ராய்காட்டின் கலப்பூர் தாலுகாவில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். நிலச்சரிவு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு வந்தார்;

மகாராஷ்டிர மணிலா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் கலப்பூர் தாலுகாவில் உள்ள இர்ஷால்வாடி கிராமத்தை வந்து, நிலைமை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து, காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் என்டிஆர்எஃப் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவிக்காக, இர்சல்வாடி கிராமத்திலேயே போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 8108195554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராஷ்டிர மாநிலம் ராய்காட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் பேசியதாகவும், மேற்கொள்ளபட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். NDRF இன் 4 குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கிருந்து மக்களை மீட்டு, காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் நடைப்பெற்றுள்ளது. ராய்கர் மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின்படி, இர்சல்வாடி கிராமத்தில் 50 முதல் 60 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மற்றும் என்டிஆர்எப் குழுவினர் மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு குறித்து ராய்காட் போலீசார் கூறுகையில், இதுவரை 75 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது, ​​60க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். NDRF, உள்ளூர் மக்கள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து உதவி பெறுவதாக ராய்காட் போலீசார் தெரிவித்தனர்.

மறுபுறம், கேபினட் அமைச்சர்கள் உதய் சமந்த் மற்றும் தாதா பூஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுவரை 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய் சமந்த் தெரிவித்தார். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கிராமம் நவி மும்பைக்கு தண்ணீர் வழங்கும் மோர்பே அணைக்கு அருகில் அமைந்துள்ளது. அணை பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீட்பு பணிக்கு ரோடு தடை;

இர்சல்வாடிக்கு செல்ல சாலை இல்லை என அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்தார். மழையால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. மீட்புக் குழுவினரும் அங்கு நடந்தே செல்ல வேண்டும். ஜே.சி.பி., பொக்லனை சம்பவ இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மீட்பு குழுவினர் குப்பைகளை கையால் அகற்றி வருகின்றனர். கிராமத்திலேயே இடிபாடுகளுக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை பிரேத பரிசோதனை செய்வது குறித்தும் யோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.