என் சாவுக்கு மாமியார்தான் காரணம் – உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

திருமணமாகி 4 மாத கர்ப்பிணியாக உள்ள பெண், தனது மாமியார் கொடுமை படுத்துவதாக கூறி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்…

திருமணமாகி 4 மாத கர்ப்பிணியாக உள்ள பெண், தனது மாமியார் கொடுமை படுத்துவதாக கூறி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் பெரியோர்களால் பார்த்து தி.நகரை சேர்ந்த குமரன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் ஆன நாள் முதலே இந்திமதியை அவரது மாமியாரான சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 

திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக உள்ள இந்துமதி மாமியாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். மாமியார் கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த இந்துதியை கணவர், மாமியார், மாமனார் என யாரும் வந்து பார்க்ககூட வரவில்லை என கூறப்படுகிறது.

 

மேலும் தாய் வீட்டிற்கு வந்த இந்துமதியை அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்ல கணவர் வீட்டிலிருந்து வரவில்லை என்றும் கணவரும் தாய் பேச்சை கேட்டுக் கொண்டு தன்னை
கண்டுகொள்வதில்லையே என்ற விரக்தியில் இருந்த இந்துமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு இந்துமதி அவரது அக்காவிற்கு வாட்சாப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த ஆடியோவில் தன் மரணத்திற்கு கணவர் குமரனும், அவரது அம்மாவான (மாமியார்) சாந்திதான் காரணம் என்றும், நானும் பாப்பாவும் செல்கிறோம் என்றும் உருக்கமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வாட்ஸ்அப்பில் இந்துமதி அக்காவிற்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்ஜை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் இந்துமதி இறந்துவிட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துமதி உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்துமதியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் இந்த வழக்கை
கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். 4 மாத கர்ப்பிணி தன்னுடைய மரணத்திற்கு மாமியார்தான் காரணம் என ஆடியோ பதிவிட்டு விட்டு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உயிரிழப்பு எதற்கும் தீர்வாகாது என்பதை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், உயிரிழப்பு எண்ணத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்..

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.