ஐஐடி பாம்பே-வில் படித்தவர்களில் 36% பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஐஐடியில் இன்ஜினியரிங் படிப்பதை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால், மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ் 2 மதிப்பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. ஐஐடி-களில் சேர 12ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படைக் கல்வித்தகுதி என்றாலும், ஜேஇஇ, நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதும் அவசியமாகிறது. ஐஐடியில் படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலைவாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகி விடுகிறது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடி மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்க்கி, வாரணாசி, தன்பாத், சென்னை ஆகிய இடங்களில் உள்ளன. ஐஐடிக்களில் பி.டெக்., தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற உயர்கல்வி படிக்கலாம். பெரும்பாலும், ஐஐடி-களில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும்போதே வளாக தேர்வு மூலம் பல முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்து விடும்.
ஐஐடியில் படித்தவர்கள் பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப அலுவலர் என பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் துறைகளில் உடனடியாக பெறலாம். இது தவிர வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐஐடி பாம்பே-வில் படித்தவர்களில் 36% பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த ஆண்டு ஐஐடி பாம்பே-வில் பயின்ற 2,000 மாணவர்களில் 712 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஐஐடி பாம்பேயில் பயின்றவர்களில் வேலைவாய்ப்பு இல்லாத மாணவர்களின் சதவீதம் 32.8% ஆக இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு 35.8% ஆக அதிகரித்துள்ளது. இதனை பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.







