33 % மகளிர் இடஒதுக்கீடு மசோதா – மக்களவையில் இன்று விவாதம்..!

மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால்…

மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் நேற்று முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் பட்டியலிட்டு பேசினார்.

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., தொகுதி ஒதுக்கீடு , 33 சதவிகித மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்கு தேர்தல் வேறுபடும் வகையில் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 181 ஆக உயரும்

முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வேண்டும். இதன் பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதன் பிறகே மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு அமலுக்கு வரும்.  இப்பணிகள் 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.