இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த புதன்கிழமை 8 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினா்களும், எதிராக 2 உறுப்பினா்களும் வாக்களித்தனா். இதனை அடுத்து இந்த மசோதா நிறைவேறியது. இதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.
இந்த நிலையில், இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பொது வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
பொது வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பு இருப்பது சமூகத்தில் ஒட்டுமொத்தமாக பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான முக்கிய முடிவுகளில் ஒன்றாக இந்த மசோதா உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







