பி.வாசு இயக்கத்தில், பிரபு, குஷ்பு நடிப்பில் வெளிவந்த ‘சின்னதம்பி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், இது குறித்த நெகிழ்ச்சியான பதிவொன்றை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் இளையராஜா இசையில் நடிகர் பிரபு ஹீரோவாகவும் நடிகை குஷ்பு ஹீரோயினாகவும் நடித்த ‘சின்னத்தம்பி’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக இன்று வரை இருந்து வருகிறது. சொல்லப்போனால் படத்தின் கதையென்று பார்த்தால் மகாராணியாய் வளர்க்கப்படும் பணக்காரப் பெண்ணான குஷ்புவிற்கும், அதே வீட்டில் வேலைக்காரராக இருக்கும் பிரபுவுக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வெகு சாதாரணமான கதை தான். இருப்பினும் திரைக்கதையில் இயக்குநர் பி.வாசு தனக்கே உரிய ஸ்டைலோடு படத்தின் தரத்தை மெருகேற்ற, இசைஞானி இளையராஜாவும் இப்படத்திற்காக அற்புதமான பாடல்களை மெட்டுக்களாக தந்து படத்தின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனால் இப்படம், வெளியான போது வசூலை வாரிக் குவித்ததோடு சில திரையரங்குகளில் தொடர்ந்து ஒரு வருட காலம் வரை திரையிடப்பட்டு புதிய சாதனையையும் படைத்தது. குறிப்பாக, 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாள் ஓடியது, மேலும் 9 திரையரங்குகளில் 356 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது.
இதுதவிர இளையராஜாவின் இசையில் சின்னத்தம்பி பாடல்கள் அன்றைக்கு பட்டிதொட்டியெங்கும் ஒலித்து பலரது உள்ளங்களையும் கவர்ந்தது. ஏன், இன்றைக்கும் கூட சின்னத்தம்பி திரைப்படத்தின் பாடல்கள் ஒலிக்காத எஃப்.எம் ரேடியோக்களே இல்லை எனவும் சொல்லலாம்.
இப்படி பல பெருமைகள் ‘சின்னதம்பி’ படத்திற்கு இருந்தாலும், இந்தப் படம் குஷ்புவின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் ‘சின்னதம்பி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், இந்த படம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ் சினிமாவில் புயலை கிளப்பிய ”சின்னதம்பி” திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
இதுவரை மக்கள் என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதுமே பி.வாசு சாருக்காகவும், பிரபு சாருக்காகவும் துடிக்கும். மேலும் இப்படத்திற்க்காக அற்புதமான பாடல்களை தந்த இசைஞானி இளையராஜா
அவர்களுக்கும் , மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு அவர்களுக்கும் நன்றி. நந்தினி அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் பதிந்துள்ளார் ” என நெகிழ்ச்சியோடு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Just can't believe it's been 32 yrs since #ChinnaThambi took tamil cinema by storm. Will always be indebted for the love showered upon me. My heart will always beat for #PVasu Sir & #Prabhu Sir. Forever grateful to #Illaiyaraja Sir for his soul stirring music n Late #KBalu for… pic.twitter.com/EDxxKwnDaN
— KhushbuSundar (@khushsundar) April 12, 2023
- பி.ஜேம்ஸ் லிசா







