வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை – சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!

வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். அத்துடன்  பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

புதிய சட்டத் திருத்த மசோதாவின் அதன் முக்கிய அம்சங்கள்;

கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.

கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.

கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன்பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள்.

இச்சட்ட முன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளிவரமுடியாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.