ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை வரவேற்கத்தக்கது -குஷ்பூ

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021ஆம்…

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்தார். நிகழ்ச்சி முடிந்து ராஜேஷ் தாஸ் காரில் சென்ற போது, பெண் எஸ்பி ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது ராஜேஸ் தாஸ் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபியிடம் பெண் எஸ்பி புகார் அளித்தார்.
இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணன் ஆகியோர்  ஆஜராகினர்.
அப்போது முன்னாள்  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை  தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்பியின் காரை மறித்து சாவியை பறித்த செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகார்களின் நிலை குறித்து குஷ்பூ, டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்தார். டி.ஜி.பி சைலேந்திரபாபு அலுவலபணி காரணமாக வெளியே சென்றதை அடுத்து தமிழக சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி சங்கரை சந்தித்து அந்த வழக்குகளின் நிலை கேட்டறிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   “730புகார்கள் பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும் அந்த வழக்குகளின் நிலை குறித்து அளிக்க ஒரு மாதம் காலம் தேவை என தமிழக காவல்துறையால் கேட்கப்பட்டுள்ளதாக குஷ்பூ குறிப்பிட்டார்.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகி நீதிமன்றத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்ட சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் குறித்து பேசிய குஷ்பூ பெண்களை மானபங்கம் செய்தவர்கள், பெண்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டால் அதனை அனுபவிக்க வேண்டும். தண்டனை விதிக்கபப்ட்ட ராஜேஷ் தாஸ் சார்பாக ஜாமீன் கேட்கப்பட்டாலும் அது கிடைக்க கூடாது என குஷ்பூ கேட்டுக் கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.