புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் நாடாளுமன்ற க்கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா காலை 7.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். இதன் பின்னர் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்றனர். தமிழில் தேவாரம் பாடப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி தொடங்கியது.
இதன் பின்னர் யாகம் வளர்த்து பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆதினங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். ஆதினங்களிடம் ஆசி பெற்று செங்கோலை நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றார்.
ஆதினங்களிடம் பெற்றுக் கொண்ட செங்கோலை நாடாளுமன்ற கட்டடத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். இதனைத் தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், பௌத்தம், ஜைனம் உள்ளிட்ட 12 மத தலைவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகள் நடத்தினர்.
இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற கட்டடத்தை கட்டிய தொழிலாளர்களை கௌரவப்படுத்தினார். கட்டுமான தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்தும் நினைவுப் பரிசை வழங்கியும் பிரதமர் மரியாதை செய்தார்.







