முக்கியச் செய்திகள் தமிழகம்

2ஜி முதல் 5ஜி வரை…அரசியல் களத்தில் மீண்டும் அலைக்கற்றை சர்ச்சை…

1,76,0000,00,000…..2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோக்களின் முன்பு எழுதப்பட்ட இந்த பிரம்மாண்ட நம்பர் என்னவென்று பொதுமக்கள் பரபரப்பாக பேசத் தொடங்கினர். இது 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலின் அளவு என எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.

2008ம் ஆண்டு நடந்த 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் இது என்றும் பாஜகவும் அதிமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் பிரம்மாஸ்திரமாக 2ஜி அலைக்கற்றை ஏல விவகாரத்தை கையில் எடுத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2008ம் ஆண்டு நடந்த 2ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து  தலைமை கணக்காயர் வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தபோதே வெடித்த சர்ச்சை நாடாளுமன்ற தேர்தலின்போது உச்சக்கட்டத்தை எட்டியது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறையாக விதிகள் பின்பற்றப்படவில்லை, நிதியமைச்சகம், சட்ட அமைச்சகம், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளை புறக்கணித்துள்ளார், ஏலத்தில் விண்ணப்பிப்பதற்கான தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டதால் 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதிக நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை, முதலில் வருவபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏலம் விட்டது விதிமீறல் என அடுக்கடுக்கான புகார்களை அப்போது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது, தலைமை கணக்காயர் வினோத் ராய் தமது அறிக்கையில் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகளால் நாட்டிற்கு 1,76,645 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வினோத் ராய் தமது அறிக்கையில் கூறியிருந்தார்.

வினோத் ராயால் வருவாய் இழப்பு என்று குறிப்பிடப்பட்ட தொகை ஊழல் என எதிர்க்கட்சிகளால் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனால் ஆ.ராசா கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அப்போதைய தொலைத் தொடர்பு செயவாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.  ஆ.ராசா சுமார் 15 மாதங்கள் விசாரணைக் கைதியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், திமுகவிற்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்ட து. 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 2ஜி வழக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதே நேரம் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 2ஜி அலைக்கற்றை விவகாரம் முக்கிய பிரச்சனையாக எழுந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கான காரணங்களுள் ஒன்றாக அமைந்தது.

இப்படி இந்திய அரசியலிலும் தமிழ்நாடு அரசியலிலும் பெரும் புயலை கிளப்பிய 2ஜி விவகாரத்தில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ந்தேதி முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அன்றுதான் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. ஆ.ராசா, கனிமொழி உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 19 பேரையும் நீதிபதி ஓ.பி.சைனி  2ஜி வழக்கிலிருந்து விடுவித்தார். குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல் சிபிஐ நிரூபிக்கத் தவறவிட்டதாகக் கூறி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து நீதிபதி ஓ.பி.சைனி விடுவித்தார்.  2ஜி விவகாரத்தில் தங்களை சூழ்ந்திருந்து அவப்பெயர் இந்த தீர்ப்பின் மூலம் துடைத்தெறியப்பட்டுள்ளதாக திமுகவும், காங்கிரசும் கொண்டாடின. 2ஜி முறைகேடு விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தம் மீது தொடுத்த விமர்சனங்களுக்கு இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, அதிரடியாக பதிலடி கொடுத்தார். அவரது அரசியல் வாழ்க்கையும் மீண்டும் புத்துணர்வு பெற்றது. அதே நேரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இப்படி கடந்த 2008ம் ஆண்டு நடந்த 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் எழுந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு அலைக்கற்றை சர்ச்சை வெடித்துள்ளது. முன்பு 2ஜி விவகாரத்தில் அப்போது மத்தியில் ஆண்டுவந்த காங்கிரஸ் திமுக கூட்டணி அரசை நோக்கி பாஜகவினர் கேள்வி கணைகளை தொடுத்தனர். தற்போது 5ஜி அலைக்கற்றை ஏல விவகாரத்தில் மத்திய பாஜக அரசை நோக்கி கேள்விக் கணைகளை காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும்  தொடுத்து வருகின்றனர்.

இணையத்தள சேவை, தொலைத் தொடர்பு சேவையை அதிவேகமாக வழங்கும் 5ம் தலைமுறை அலைக்கற்றை சேவை விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்திருந்ததன் அடிப்படையில் இந்த ஏலம் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கான அடிப்படை மதிப்பாக 4.3 லட்சம் கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தொலை தொடர்பு சேவை வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனங்களான, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் முக்கியமாக பங்கேற்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது. மொத்தம் 72,098 மெகாஹெர்ட்ஸை ஏலம்விட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதில் 71 சதவீதம் அதவாது  51,236 மெகாஹெர்ட்ஸ் மட்டும் 1,50,173 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் முதன்முறையாக பங்கேற்ற அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு, 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை கிடைத்தது. இதற்காக அந்த நிறுவனம் 212 கோடி ரூபாயை கொடுத்துள்ளது.  பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனத்திற்கு  900, 1800, 2100, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை கிடைத்தது. இதற்காக அந்நிறுவனம் 43,048 கோடி ரூபாயை அளித்துள்ளது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம், 700, 800, 1800, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. மொத்த ஏலத் தொகையான 1,50,173 கோடி ரூபாயில், ரிலையன்ஸ்  ஜியோ இன்போகாம் கொடுத்த தொகை மட்டும் 88,078 கோடி ரூபாய் ஆகும்.  வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 1800, 2100, 2500, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை கிடைத்து. இதற்காக அந்த நிறுவனம் கொடுத்த தொகை 18,799 கோடி ரூபாய் ஆகும். மொத்தம் 7 நாட்கள் 40 சுற்றுக்களாக நடந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு 1,50,173 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.  நாட்டிற்கு சிறந்த 5ஜி சேவையை வழங்க போதுமான அளவிற்கு சிறப்பாக 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் இப்படி திருப்தியுடன் கூறினாலும் இந்த துறையின் முன்னாள் அமைச்சரும், 2008ம் ஆண்டு நடந்த 2ஜி அலைக்கற்றை ஏலத்தை சுற்றி எழுந்த சர்ச்சைகளால் பல்வேறு சங்கடங்களை சந்தித்தவருமான ஆ.ராசா, 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே 30 மெகா ஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றையை தாம் ஏலம் விட்டதாகக் கூறிய அவர், ஆனால் அந்த ஏலத்தால்  நாட்டிற்கு  1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அப்போது இந்திய தலைமைக் கணக்காயராக இருந்த வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்ததை சுட்டிக்காட்டினார்.

ஆனால் தற்போது 5 ஜி அலைக்கற்றை சேவையில் 51 ஜிகா ஹெர்ட்ஸ் ஏலம் விடப்பட்டபோதும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்தான் மத்திய அரசுக்கு வருமானம் வந்திருப்பதாக ஆ.ராசா தெரிவித்தார். சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை விலைபோக வேண்டிய 5ஜி அலைக்கற்றை ஏலம் மிகக்குறைவாக சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை மட்டுமே ஏலம் போயிருப்பதன் பின்னணி என்ன என ஆ.ராசா கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 5ஜி அலைக்கற்றை சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏலம்போகும் என மத்திய அரசு தரப்பிலேயே கூறப்பட்ட நிலையில் மீதிப்பணம் எங்கே என ஆ.ராசா எழுப்பியுள்ள கேள்வி மீண்டும் அரசியல் களத்தில் மீண்டும் அலைக்கற்றை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல்

G SaravanaKumar

மாநிலங்கள் இழந்த உரிமையை பெறுவோம்: வைகோ

EZHILARASAN D

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு!

Saravana