“25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநீக்கம்… வாங்கிய சம்பளத்தையும் திருப்பி தரவேண்டும்” – உச்ச நீதிமன்ற உத்தரவால் மம்தா அரசுக்கு விழுந்த அடி!

மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் பேருக்கான பணி ஆணைகளை ரத்து செய்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இதனால், மம்தா பானர்ஜி தலைமயிலான மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்வதில் மோசடி நடந்துள்ளது என்றும், அதில் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வமான தன்மையே இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பிவி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,

“உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட எவ்வித மூகாந்திரமும் இல்லை. மோசடி செய்து பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளது என்பதால், அவை முழுவதும் மோசடியாகும். மூன்று மாத காலத்திற்குள் இந்த பணிகளுக்கான புதிய தேர்வு செயல்முறையை முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர். மேலும், “இந்த புதிய தேர்வு செயல்முறையில் தேர்வு செய்யப்படுபவர்கள், 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதில் இருந்து பெற்ற சம்பளத்தை திருப்பித் தர தேவையில்லை.

அதேநேரத்தில், புதிய தேர்வு செயல்முறையில் தேர்வாகாதவர்கள் 2016இல் இருந்து பெற்று வந்த சம்பளத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் சலுகை அளித்துள்ளது என்றும் தற்போதைய பதவியில் தொடரலாம்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மாநில அளவில் நடந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காலி பணியிடங்களின் எண்ணிக்கை 24,640 ஆக இருந்த நிலையில், 25,753 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. பணி நியமனத்தில் நடைபெற்ற இந்த முறைகேட்டை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் தீர்ப்பளித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனங்களையும் ரத்து செய்து, இதுவரை அவர்கள் பெற்ற சம்பளத்தையும் திரும்பத் தர வேண்டும் என்று கடந்தாண்டு உத்தரவிட்டது. இது அப்போது மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.