அகத்தியனின் “காதல் கோட்டை”க்கு வயது 25

காதல்… மனிதர்கள் மட்டுமல்லாது பல உயிரினங்களுக்கும் பொதுவான ஒரு உணர்வு… ஆதாம்- ஏவாள் தொடங்கி, ஷாஜகான்-மும்தாஜ், லைலா-மஜுனு, அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் போன்ற காவிய காதல் மட்டுமல்லாமல், மனித இனம் தோன்றிய காலம் தொட்டு, அகநானூறு,…

காதல்… மனிதர்கள் மட்டுமல்லாது பல உயிரினங்களுக்கும் பொதுவான ஒரு உணர்வு… ஆதாம்- ஏவாள் தொடங்கி, ஷாஜகான்-மும்தாஜ், லைலா-மஜுனு, அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் போன்ற காவிய காதல் மட்டுமல்லாமல், மனித இனம் தோன்றிய காலம் தொட்டு, அகநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் வரை, அனைத்து காலகட்டத்திலும், அனைத்து சமூகங்களும், அனைத்து நாகரீகங்களும் காதலை கொண்டாடியிருக்கின்றன…

கார்த்திக் நேத்தாவின் அந்தாதி வரிகளில் சொல்வதானால், “காதல் – வாழ்ந்து பெற்ற டிகிரி”

பவள விழா கண்டு, நூறாண்டு வரலாற்றை தொடவிருக்கும் தமிழ் சினிமாவும், காதலை கொண்டாடி தீர்த்த பின்னும், காதல் இன்னும் மிச்சமிருக்கிறது. பேசியே காதல் (மௌன ராகம் கார்த்திக்), பேசாமல் காதல் (சொல்லாமலே லிவிங்ஸ்டன்), சொல்லாமல் காதல் (இதயம் முரளி), பாடியே காதல் (மைக் மோகன், புதுப்புது அர்த்தங்கள் ரஹ்மான்), ஆடியே காதல் (கரகாட்டக்காரன்), தொடாமல் காதல் (டி.ராஜேந்தர்), பதிவுத் திருமணக் காதல் (அலைபாயுதே) என, பல்வேறு பரிமாணங்களில் சொல்லப்பட்ட தமிழ் சினிமாவில், ‘பார்க்காமலேயே காதல்’ என்கிற புதிய ட்ரெண்டை உருவாக்கிய படம் ‘காதல் கோட்டை’…

கால் நூற்றாண்டு கடந்தும், தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் “காதல் கோட்டை” 1996-ம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வெளியானது…

தனது சான்றிதழ்கள் தொலைந்து போக, அதனை பத்திரமாக தபாலில் அனுப்பும் சூர்யா மீது, பார்க்காமலேயே காதல் கொள்ளும் கமலி, இறுதியில் அவரை கரம் பிடித்தாரா? என்பதே, இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி…. “கோப்பெரும்சோழனும், பிசிராந்தையாரும் பார்க்காமலேயே நட்பு கொண்டிருந்தனர், என்கிற புறநானூற்று கதை தான், காதல் கோட்டைக்கான இன்ஸ்பிரேஷன்” என்கிறார் படத்தின் இயக்குநர் அகத்தியன்…

நலம் நலமறிய ஆவல், காலமெல்லாம் காதல் வாழ்க, சிகப்பு லோலாக்கு குலுங்குது, என 3 தேனிசை பாடல்களை கொடுத்திருந்தாலும், தேவாவின் குரலில் ‘கவலைப்படாதே சகோதரா’ பாடல், தமிழ் சினிமாவின் ஆல் டைம் ஹிட் என்றே கூறலாம். ராஜஸ்தான் ஒட்டகங்களின் ஒய்யார நடையையும், ஜெய்ப்பூர் அரண்மனைகளின் அழகையும் வெளிக்கொணர்ந்த தங்கர்பச்சனின் ஒளிப்பதிவு, நல்ல மனிதர்களை மட்டுமே கொண்டிருந்த திரைக்கதை, இறுதி காட்சிக்கு முன்பு வரை, டிரைவர் – பாசஞ்சர் என பயணிக்கும் கமலியும் சூர்யாவும், மழையாலும், ஒரு எம்பிராய்டரி செய்யப்பட்ட உல்லன் ஸ்வட்டராலும் இணைவது, என ஒவ்வொரு காட்சியமைப்பிலும் பாசிட்டிவ் விஷயங்களை கொண்டிருந்த ‘காதல் கோட்டை’க்கு, நூற்றுக்கு 52 மதிப்பெண் அளித்திருந்தது ஆனந்த விகடன் சினிமா விமர்சனக் குழு…

தனது முதல் படமான “அமராவதி” வெளியான மூன்றாண்டுகளில், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருந்த அஜித், 1996-ம் ஆண்டு தொடக்கத்தில், இயக்குநர் அகத்தியனின் ‘வான்மதி’ படத்திலும், பின்னர் அதே ஆண்டில் ‘காதல் கோட்டை’யிலும் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்திருந்தார்…

1996-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த படமாக’ தேர்வு செய்யப்பட்ட காதல் கோட்டை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.

1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், பல தமிழ் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட போதிலும், 42 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு முதல்முறையாக ‘சிறந்த இயக்குனர்’ என்ற விருதை, தமிழ் சினிமாவிற்காக பெற்று தமிழகத்தையே பெருமைப்பட வைத்தார் இயக்குநர் அகத்தியன்…

இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த காதல் திரைப்படங்களின் பட்டியலில், அகத்தியனின் காதல் கோட்டை, எப்போதும் அழியாத கோட்டையாகவே இருக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.