2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10 மணி அளவில் இந்த பட்ஜெட் தாக்கலை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை; இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை. இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி நிலை அறிக்கை ஒடுகிற குழந்தையாய் இருக்கும் எம கூறி தனது வேளாண் உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
வேளாண் பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:
- வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு; கடந்த ஆண்டை விட ரூ.231.9 கோடி அதிகம்.
- பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு 25 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்; சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும்.
- பனைமரம் ஏறும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் 75% மானியத்தில் வழங்கப்படும்;பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும், அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு அளிக்கப்படும்
- பனைஓலை பொருட்கள் தயாரிக்க 100 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- நெல் அறுவடைக்குப் பின், பயறு வகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; இதன் மூலம் கூடுதலாக 13,000 மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும்.
- நெல்லில் உற்பத்தி திறனை அதிகரிக்க, குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவுசெய்யும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படும்.
- திருக்கடையூர் மாநில அரசு விதை பண்ணையில் குழிதட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து, 250 ஏக்கரில் செயல்விளக்கத் திடல் அமைக்கப்படும்.
- வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு; இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து, பரிசு அளிக்கப்படும்.
- விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது, தங்கள் பங்களிப்பு தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (UPI) மூலம் செலுத்த வழிவகை.







