காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மிதிவண்டியிலேயே பயணம் செய்த இளைஞர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
காஷ்மீர், புட்கம் மாவட்டத்தை சேர்ந்தவர், 23 வயதான ஆதில் டெலி. இவர், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 8 நாட்கள் 1 மணி நேரம் 37 நிமிடத்தில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது பயணத்தை ஸ்ரீநகரிலிருந்து காலை 7.30 மணி அளவில் தொடங்கி மார்ச் 30-ம் தேதி காலை 9 மணி அளவில் இலக்கை அடைந்துள்ளார். ஆதில் கடந்த டிசம்பர் மாதத்தில் கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் மார்ச் மாதத்தில் ஒப்புதல் பெற்றது. இந்த சாதனை புரிய ஆதில் 5 மாதம் பயிற்சி மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவருடைய இந்த பயணத்தை காஷ்மீரின் பிரதேச ஆணையர் பாண்டுரங் கே.போல் நிறைவு செய்து வைத்துள்ளார். இந்த பயணத்தில் முக்கிய நகரங்களான டெல்லி, ஆக்ரா, குவாளியர், ஹைதராபாத் மற்றும் மதுரை ஆகிய இடங்களை ஆதில் கடந்துள்ளார். இவருடன் பிசியோதெரபிஸ்ட், மருத்துவர், மெக்கானிக் மற்றும் கேமரா குழு உள்ளிட்ட 8 பேர் பயணம் செய்தனர். காஷ்மீரைச் சேர்ந்த அப்ராக் அக்ரோ என்பவர் இவருடைய பயணத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார்.
ஆதில், 2019-ம் ஆண்டில் ஸ்ரீநகரிலிருந்து லே வரை உள்ள 400 கி.மீ உயரமுள்ள பயணத்தை 26 மணி நேரம் 30 நிமிடத்தில் முடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, கின்னஸ் உலக சாதனைக்கு, தனது சாதனையின் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்பு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 8 நாட்கள் 7 மணி நேரம் 38 நிமிடத்தில் கடந்து, 17 வயது சிறுவன் படைத்த சாதனையை ஆதில் டெலி முறியடித்துள்ளார்.