மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் முதன்மை போட்டியாளர்களாக உள்ளனர். இதையடுத்து, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்ட தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி, திரிணாமூல் கட்சிகள் தனித்து களம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திரிணாமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களை இந்த மாத இறுதியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்திப்பது குறித்து எந்தவித திட்டமும் இல்லை. இதர எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மட்டுமே சந்திப்பு நடத்தவுள்ளதாகவும்கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தங்கக் கடத்தலில் கேரள மாநிலம் முதலிடம்
மம்தாவின் சந்திப்பில் சரத்பவார், பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் கட்சி காங்கிரஸ் அல்லாத அணியில் இடம்பெற்று போட்டியிட்டது. இந்நிலையில், மம்தாவின் இந்த சந்திப்பு எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-ம.பவித்ரா








