தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்ய 20 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலையால் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதைத்தடுப்பதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தடுப்பூசி பெற அனைத்து மாநிலங்களும் ஒன்றினைய வேண்டும் என கேரள முதல்வர் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட முதல்வருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
சமீபத்தில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து கொரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி தொடர்பாக கடந்த மே 18ஆம் தேதி இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. இதன்படி, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மே 31-ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகளை தெரிவிக்குமாறும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்ய 20 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்களின் விருப்பக் கருத்துகள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு, தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்து உற்பத்திக்கான கட்டமைப்புகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







