17 வருட கிரிக்கெட் வாழ்க்கை; ஓய்வு முடிவை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்..!

லண்டனில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். இங்கிலாந்து…

லண்டனில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போடி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்தது. இதே போன்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 12 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில், 3ஆம் நாள் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன். அந்த வகையில் இந்த ஆஷஸ் தொடரை ரொம்பவே மகிழ்ச்சியுடன் விளையாடினேன். நாளை தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி நாள் போட்டியாக இருக்கப் போகிறது. இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிந்து கொள்வதை பெருமையாகவே கருதினேன். கடந்த சில நாட்களாவே ஓய்வு குறித்து யோசித்து வந்தாலும், நேற்று இரவு தான் ஓய்வு பற்றி இறுதி முடிவை எடுத்தேன். ஆஷஸ் தொடரில் தான் எனது கடைசி பவுலிங் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது ஓய்வு முடிவு குறித்து இன்று காலை தான் சக வீரர்களிடமும் கூறினேன். ஆனால், ஓய்வு முடிவு அறிவிக்கும் வரையில் அரைமனதாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

யார் இந்த ஸ்டூவர்ட் பிராட்?

ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜான் பிராட் இங்கிலாந்தில் நாட்டிங்காம் என்ற இடத்தில் 1986-ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அன்று கிறிஸ் பிராட் என்பவருக்கு மகனாக பிறந்தவர். ஸ்டூவர்ட் பிராட் என்றதுமே முதலில் எல்லோருக்கும் நினைவில் வருவது யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்த நிகழ்வாகத்தான் இருக்கும். அந்த மோசமான நிகழ்விற்கு பின்னர் பிராட் தன்னை சிறந்த டெஸ்ட் பௌலராக நிலை நிறுத்தியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட் டெஸ்டில் 602 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட் ஆகும். சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் வரிசையில் பிராட் 5வது இடத்தில் உள்ளார். 37 வயதான பிராட் இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெருவதாக நேற்றிரவு அறிவித்தார். இவரை விடவும் 41 வயதான ஆண்டர்சன் விளையாடிக் கொண்டிருக்கும்போது பிராட்டின் இந்த முடிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 688 , இந்திய வீரர் அனில் கும்ளே 619 ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். இந்த பட்டியலில் ஸ்டூவர்ட் பிராட் 5வதாக இணைந்திருக்கிறார். மேலும், இந்த பட்டியலில் இடம் பெற்ற இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.