மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் வசிக்கும் அலிராஜ்பூர் மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி அன்று ,16 வயது சிறுமியை 21 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையறிந்த ஊர் பொதுமக்கள் சிறுமிக்கு ஆதரவாக செயல்படாமல், தவறிழைத்த இளைஞருடன் பாதிக்கப்பட்ட சிறுமியையும் கயிறால் ஒன்றாகக் கட்டி ஊர் முழுக்க ஊர்வலம் செல்ல வைத்துள்ளனர்.
இதனை வீடியோவாக எடுத்து சிலர் இணையத்தில் பதிவேற்ற அது சர்ச்சைக்குரியதாக மாறியது.
தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டனர். சிறுமியை அடித்து துன்புறுத்தி ஊர்வலமாக நடக்க வைத்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட 6 பேரை கைதுசெய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்ணை அடித்து துன்புறுத்தி ஊர்வலமாக நடக்க வைத்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல் அதிகாரி திலீப் சிங் பில்வால் தெரிவித்தார்.







