ஓடும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு இருப்பு பாதை காவல் நிலைய போலீஸார் கடத்தல் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அசாம் மாநிலம், திப்ரூகார் பகுதியில் இருந்து ஈரோடு வழியாக கன்னியாகுமரி வரை
விவேக் எக்ஸ்பிரஸ் ஓடுகிறது. இந்த ரயிலில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு இருப்பு பாதை காவல் நிலையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த போது, அதில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பையை பிரித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம. ஸ்ரீ மரகதம்







