காயிதே மில்லத்தின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முஹம்மது இஸ்மாயில் சாகிபு ஜூன் 5ஆம் தேதி 1896 ஆண்டு பிறந்தார். இவர் இந்தியாவின் முஸ்லிம் தலைவர்களில் முக்கியமானவர்.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக முகமது அலி ஜின்னா இருந்த போது காயிதே மில்லத் சென்னை மாவட்ட தலைவராக, பின்னர் சென்னை மாகாண தலைவராக, அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் பணியாற்றியவர்.
தனது பி. ஏ. இறுதி தேர்வை எழுதாமல் காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து விவாதம் நடந்த போது பிற மொழிகளின் தாயாக விளங்கும் உலகின் பழமையானது தமிழ் மொழி மட்டுமே என்று காயிதே மில்லத் வாதாடினார்.
இந்நிலையில், காயிதே மில்லத்தின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை யில் உள்ள அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.







