அரியானாவை சேர்ந்த 105 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதேதரா நகரில் இந்திய தேசிய தடகள சம்மேளனம் சார்பில் தேசிய முதியோர் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 105 வயது மூதாட்டி ராம்பாய் புதிய சாதனை படைத்தார். அவர் 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி கடந்தார். இதுபோல கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ராம்பாய் மூதாட்டி ஒரு நிமிடம் 52.17 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 105 வயதில் தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த மூதாட்டி ராம்பாய்க்கு மைதானத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சாதனை படைத்த மூதாட்டி ராம்பாய் கூறும்போது, எனது அடுத்த இலக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்பது என்றும் அதிலும் சாதனை படைத்து வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன், என்றார். அவரிடம் இந்த வயதில் சாதனை படைத்த நீங்கள், இளம்வயதில் தடகள போட்டிகளில் பங்கேற்காதது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், அந்த வயதில் என்னை யாரும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.
வெற்றி பெற்ற மூதாட்டி மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்றதோடு, இதில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார். சைவ உணவு வகைகளை மட்டுமே மூதாட்டி சாப்பிடுவாராம். தினமும் 250 கிராம் நெய், 500 கிராம் தயிர் சாப்பிடுவாராம். மேலும் தினமும் 2 முறை அரை லிட்டர் பால் குடிப்பார் என்றும் வயலில் வேலை செய்தாலும் தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவார் என்றும் அவரது பேத்தி தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்









