100 சதவிகித வாக்குப்பதிவு; விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வரும் தேர்தல் அதிகாரிகள்

வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில்…

வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனைகள் நடைபெற்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் சிவகொள்ளை பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் ஓட்டு போடும் இயந்திரம் மற்றும் ஆள்காட்டிவிரல் போன்ற வடிவத்தில் கோலங்கள் வரைந்தனர். ‘மக்களாட்சியின் மீது பற்று உடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதி சுதந்திரமாகவும் நியாயமாகவும் அச்சமின்றி வாக்களிப்போம்’ என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து உரிய அனுமதியின்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கொடுப்பதற்காக இரண்டு கண்டெய்னர் லாரிகளில் ஸ்கூல் பேக்குகள் எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு கண்டெய்னர் லாரிகள் மற்றும் அவற்றில் இருந்த 50 ஆயிரம் ஸ்கூல் பேக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பது குறித்தும் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.