தாட்கோ மூலமாக அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100% வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரப் (Cosmetology& Hair Dressing) பயிற்சியை தாட்கோ கழகம் அறிவித்துள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தாட்கோ நிறுவனம் பல்வேறு திறன் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family salon and spa International Training Academy) மூலமாக அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology& Hair Dressing) பயிற்சியை தாட்கோ கழகம் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பத்தாம் வகுப்பு முடித்த 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 45 நாட்கள் இப்பயிற்சி அளிக்கப்படும் நிலையில், சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இங்கையே தங்கும் வசதியும் செய்துகொடுக்கப்படுகிறது. இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development Of India)-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பயிற்சியினை பெற்றவர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் 100% வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சி முடிப்பவர்களுக்கு 2.25 லட்சம் மானியத்துடன் 10 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கி சுயதொழில் தொடங்க உதவி செய்யப்படும் என்று கூறியுள்ளார். பயிற்சிக்கான செலவு மற்றும் விடுதி செலவு உட்பட இப்பயிற்சிக்காக ஆகும் மொத்த செலவுத் தொகையான ரூ.45,000-த்தை தாட்கோ நிறுவனமே ஏற்கும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான http://www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000/-முதல் ரூ.20,000/- வரை வழங்க வாய்ப்புள்ளது .
- பி.ஜேம்ஸ் லிசா









