உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு உணவு வழங்குவதிலிருந்து தடம் மாறி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.
1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உணவு பாதுகாப்பின் நிலை மற்றும் பசி கொடுமையில் சிக்கித் தவிக்கும் மக்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல், ஊட்டச்சத்து மிகுந்த சத்தான உணவுகள் மக்களுக்குக் கிடைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டு தோறும் உலக அளவில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தான உணவு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தாண்டிற்கான ஆய்வறிக்கையில், மக்களுக்கு உணவு வழங்குவதிலும், பசி கொடுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் தடம் மாறி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மக்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் நிலவும் ஏற்ற தாழ்வுகள் காரணமாக உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில், இந்த ஏற்ற தாழ்வுகளை கொரோனா பாதிப்பு மற்றும் கால நிலை மாற்றம் மேலும் அதிகரித்து வருவதாக, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வறிக்கை மூலம் உலக அளவில் பசி கொடுமையால், சிக்கித் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 83 கோடியைத் தொட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 78.2 கோடியாக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் 83 கோடியாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, உலக மக்கள் தொகையில், ஏறத்தாழ 10 சதவீத மக்கள் பசி கொடுமையால், பாதிக்கப்படுவதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுகிறது.
அண்மைச் செய்தி: ‘ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூ; மாணவர் ஒருவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை’
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மை உணவு உற்பத்தியில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத் தாக்கத்தால் மழை பொழிவு அளவு குறைந்துள்ளதையும், ஒரே சமயத்தில் அதிக மழை பொழிவதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காலநிலை மாற்றம் தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியில் கடுமையான பாதிப்பை, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஏற்படுத்தும் என அண்ணா பல்கலைக்கழக காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஜோசப் குரியன் கூறுகிறார்.
உலக அளவில் உணவு மற்றும் வேளாண் துறைக்கு அதிக அளவில் நிதி வழங்கப்பட்டாலும் அவற்றின் பெரும் பகுதி, எளிய விவசாயிகளுக்குச் சென்று சேராத சூழல் இருப்பதாகவும் , அரசின் பெரும்பாலான சலகைகளால் பெரு விவசாயிகள் மட்டுமே பலனடைவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும் ஊட்டச்சத்து உணவுகளான, காய் கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், இறைச்சிகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய அதிக சலுகைகள் வழங்கி, எளிய மக்களுக்கு அவை சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.