குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சகோதர, சகோதரி மூன்று பேர் இருட்டு அறையில் முடங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட் பகுதியை சேர்ந்த 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருட்டு அறை ஒன்றுக்குள் அடைபட்டு கிடந்ததை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்தது. இவர்கள் மூவரும் நன்றாக படித்த பட்டதாரிகள். ஒருவர் வழக்கறிஞராக இருந்துள்ளார். மற்ற இருவரும் சைக்காலஜி மற்றும் பொருளாதாரம் படித்துள்ளனர். மூவரும் அறைக்குள் அடைந்து கிடந்ததற்கான காரணம் தெரியாமல் பலரும் குழப்பமடைந்தனர்.
தனது தாய் இறந்த சோகத்தில் அவர்கள் மூவரும் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக வெளியே வரவில்லை என தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் மூடநம்பிக்கை காரணமாக அவர்கள் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1986ம் ஆண்டு அவர்களது தாய் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு மூவரும் யாரிடமும் சரிவர பேசவில்லை. இறுதியில் வெளியே வர விரும்பாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்ததாக தந்தை கூறியுள்ளார். அவர்களுக்கு தேவையான உணவை மட்டும் வெளியே இருந்து கொடுத்து வந்துள்ளார்.
இருப்பினும் மூவரது உடலும் நலிவடைந்து மோசமாக காணப்பட்டுள்ளது. அவர்கள் இருந்த இடமும் சுத்தமாக இல்லை என கூறப்பட்டுள்ளது. மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன ரீதியான பாதிப்புகளுக்கும் உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







