போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை தடுக்கவும், விற்பனை செய்வோரை தனிப்படை அமைத்து பிடிக்கவும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் அதிகரிப்பால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாகவும், குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 கோடி கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு, மாவட்ட தலைநகரங்களில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 27ம் தேதியோடு இந்த கையெழுத்து இயக்கம் முடிவடைகிறது.
இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தரும் வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கையெழுத்து இட்டு, வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார். போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த இயக்கத்திற்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.









