பெரம்பலூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பெண் சேயுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயவர்மன்- அழகம்மாள் தம்பதி. அழகம்மாள் தாம் கருவுற்றிருப்பதாக 2020ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி சுகாதாரத்துறையில் பதிவு செய்துள்ளார். அதன் பின் அவர் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை செய்யாததால், சுகாதாரத்துறையினர் நேரிலேயே சென்று பல முறை அழைத்துள்ளனர். ஆனால் அக்குபஞ்சர் சிகிச்சை முறையை மேற்கொண்டு வரும் விஜயவர்மன், செவிலியரான தமது மனைவி அழகம்மாளுக்கு வீட்டிலேயே சிகிச்சை பார்க்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அரும்பாவூர் காவல்நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்திய போது, வீட்டில் பிரசவம் பார்த்துக்கொள்ள இருப்பதாகவும், அதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் தாங்களே பொறுப்பு எனவும் விஜயவர்மன் தம்பதி எழுதிக்கொடுத்துள்ளனர். நேற்று அழகம்மாளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அதனை சரி செய்ய முடியாததால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில், வீட்டில் கொடுக்கப்பட்ட மருந்துகளால் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. அழுகிய நிலையில் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், அழகம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.







