விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
காவல்துறை அதிகாரி என்பதற்கு முன்பு தான் ஒரு விவசாயி என கூறியுள்ளார். மேலும் பேசுகையில், ‘நான் இந்த இடத்திற்கு வந்ததற்கான காரணம் எனது தந்தை விவசாயியாக வயலில் இறங்கி வேலை செய்ததுதான். அதனை வைத்தே நான் படித்தேன். அதனால் விவசாயத்திற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது அம்மாவும் விவசாயம் செய்கிறார். ஒவ்வொரு முறையும் கடுங்குளிரில் போராட்டம் செய்யும் விவசாயிகள் பற்றி அவர் என்னிடம் கேட்கும் போது என்னால் அவரது கண்களை பார்க்க முடியவில்லை’ என கூறியுள்ளார்.
பணியை ராஜினாமா செய்துள்ள நிலையில், விரைவில் டெல்லிக்கு சென்று விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக லக்மிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.







