ஜெயங்கொண்டம் அருகே தனிபட்டா வழங்குவதற்குரிய நிலத்தை அளந்து கொடுக்க, 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலஅளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வனத்துறையில் பணியாற்றி வந்த நிலையில் நிலஅளவர் பணிக்காக விண்ணப்பித்து 2011-ம் ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நில அளவையராக ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு தனிப்பட்டாவாக மாற்றம் இடத்தினை அளந்து அத்துகாட்டுவதற்காக சீனிவாசனை அணுகியுள்ளார். அதற்காக 5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் அளந்து தருவேன் என சீனிவாசன் கூறியதாக தெரியவருகிறது.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் வானதி தலைமையிலான போலீசார் நேற்று பவுடர் பூசப் பட்ட பணத்தை கார்த்திகிடம் கொடுத்து அனுப்பிவைத்தனர்.
புளியங்குழி கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் சீனிவாசனை வரச் சொல்லி அவரிடம் கார்த்திக் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் சீனிவாசனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.







