கன்னியாகுமரியில் 12-ம் வகுப்பு புடித்துவந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் அப்பகுதியில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இவரது வீட்டின் முன்பாக 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ள சதீஷ் அவரை காதிலிப்பதாகவும் சொல்லி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
சதீஷின் ஆசை வார்த்தைகளை நம்பிய பள்ளி மாணவி ஒரு கட்டத்தில் அவர் சொன்ன அனைத்தையும் செய்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சதீஷ் கடந்த 2019-ம் ஆண்டு மாணவியை தனது வீட்டின் மாடிக்கு அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதற்கடுத்த நாட்களில் பள்ளி மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்த சதீஷ், திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சதீஷை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவியை திருமணம் செய்துகொள்வதாக சதீஷ் உறுதி அளித்தார். இதனையடுத்து வழக்கு ஏதும் பதிவு செய்யாத காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
காவல்நிலையத்தில் சதீஷ் கூறிய வார்த்தையை நம்பிய மாணவியின் உறவினர்கள் கடந்த டிசம்பர் மாதம் சதீஷ் வீட்டுக்கு திருமணம் குறித்து பேசுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளில் பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத மாணவியும் அவரது உறவினர்களும் சதீஷின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் மகளிர் காவல்துறையினர் பள்ளி மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியின் புகாரைத்தொடர்ந்து, சதீஷின் தாயார் சுந்தரி மற்றும் சதீஷின் சகோதரர் ரதீஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த சதீஷ் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி இருந்துள்ளார். பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த சதீஷை பிடிக்க காவல்துறையினர் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். சதீஷை தீவிரமாக தேடிவந்த காவல்துறையினர் 2 மாதங்களுக்கு பின் அவரை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.







