நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினரிடம், உடனடியாக 650 கோடி ரூபாயும், முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரத்து 108 கோடி ரூபாயும் தேவை என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் நிவர் புயலால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து புகைப்படம் மற்றும் காணொளி வாயிலாக விவரிக்கப்பட்டது. மேலும் தற்போது புரெவி புயல் எதிரொலியாக கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று சென்னையில் தங்கிய மத்திய குழுவினர், இன்று இரண்டு குழுவாக பிரிந்து இன்றும், நாளையும் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு நடத்துகின்றனர். பின்னர் 8-ம் தேதி தமிழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். 4 நாள் ஆய்வை முடித்துவிட்டு அன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அதன் பின் மத்திய அரசிடம் புயல் சேதம் குறித்து அறிக்கையை அவர்கள் அளிக்கவுள்ளனர்.







