நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்: வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி கொள்ளை!

நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள் வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான…

நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள் வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன் ஹரி கிருஷ்ணன், சூர்யா, கண்ணன், சிரஞ்சீவி உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை 7 மணி அளவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று இரவு கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 2 அதிவேக படகில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர் படகை சுற்றி வளைத்தனர். மேலும் கடுமையான ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி, பைபர் படகில் இருந்த 550 கிலோ வலை, 50 ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

படு காயங்களுடன் இன்று காலை செருதூர் துறைமுகத்திற்கு கரை திரும்பிய மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விஜய கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது மேலும் 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்ப சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.