இந்த தேர்தலில் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வெற்றிநடைபோடும் தமிழகம் என்கிற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 வது பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூரில் உள்ள தனியார் விடுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செய்தார்.
கோவில்பட்டி தொகுதியில் உள்ள வில்லுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பருத்தி விவசாயிகளிடையே உரையாற்றினார். இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத் தந்த மாநிலம் தமிழகம்தான் எனக் கூறினார். தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விவசாயிகளின் பாதுகாவலனாக இருந்து வரும் அதிமுக அரசு, குழந்தைகள் போல் அவர்களை பாதுகாத்து வருவதாகத் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் மனம் புண்படும்படி பேசுவதாகவும், அவர்களை ரவுடிகளோடு ஒப்பிட்டு பேசுவதாகவும் முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.







