தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். மொத்தமுள்ள 12 ஆயிரத்து 621 பணியிடங்களில், சுமார் மூன்றாயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கிராம நிர்வாக அலுவலர் இல்லாத இடங்களை வேறொரு கிராமத்திற்கான நிர்வாக அலுவலர் கூடுதலாக கவனித்துக் கொள்வதால் கூடுதல் பணிச் சுமை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் போட்டி தேர்வை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.







