டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமா? – அமைச்சர் முத்துசாமி விளக்கம்

டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாகவும், அரசு என்பதால் மூடி மறைக்கத் தயாராக இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் முத்துசாமி, 90 மிலி மது விற்பனை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.…

டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாகவும், அரசு என்பதால் மூடி மறைக்கத் தயாராக இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் முத்துசாமி, 90 மிலி மது விற்பனை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி,  வீட்டு வசதி வாரியம் சார்பாக மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக விற்பனை பத்திரம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  நீண்ட நாட்களாக கொடுக்கப்படாமல் தேங்கியிருந்த 12,120 விற்பனை பத்திரங்கள் கொடுக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னைக்குரிய இடங்களில் தீர்வு காணப்பட்டது. 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. நில எடுப்புப் பிரிவு, ஒதுக்கீடு பிரிவு என பல்வேறு பிரிவுகளின் கீழ் 4,758 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  நாளை முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கோரிக்கை மனு பெட்டிகள் மீண்டும் வைக்கப்படவுள்ளது. மனுக்களை அளிக்கலாம். வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக 2 ஏக்கருக்கும் மேல் பரப்பளவிலுள்ள 15 இடங்களில் முன்மாதிரியான கட்டடங்கள் கட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மிகத்தரமாக, அழகாக, அத்துனை வசதிகளையும் கொண்ட, பசுமைக் கட்டடமாக கட்டப்படும். பத்திரிக்கையாளர்களுக்காக 70 வீடுகளில், 58 வீடுகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துட்டன், கட்டி விற்கப்படாத இடங்களில் கார் பார்க்கிங், மற்ற குறைபாடுகளுடன் உள்ளது. அவை விற்கப்படாவிட்டால் வாடகைக்கு விடப்படும். டாஸ்மாக் கடைகளுக்கு நேரம் மாற்றியமைக்கப்படாது. வந்த கோரிக்கைகளையே தெரிவித்தேன். மற்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஆலோசிக்க வேண்டும். ஆலோசிக்கும்போது பல கருத்துகளை சொல்கிறார்கள். மற்ற மாநிலங்களில் என்ன நடைமுறை என பார்க்கிறோம். டாஸ்மாக்கில் வேலை பார்ப்பவர்களை ஒதுக்கி செல்கிறார்கள். வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே இருக்கும் கடைகளை கணக்கெடுக்குமாறு முதலமைச்சர் மீண்டும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 90 மிலி மது விற்பனை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மது குடிப்போர் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அரசு என்பதால் மூடி மறைக்கத் தயாராக இல்லை. பாட்டிலுக்கு ரூ 10 வாங்குவது சில இடங்களில் இருந்தது. விற்பனையாளர், மேற்பார்வையளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வயது குறைந்தவர்கள், முடியாத வயதானவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் முன்பாக மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு படங்கள் ஒளிபரப்பப்படும். இதற்குமேல் மதுவிற்பனை வருவாய் உயராது. மதுக்கடைகளின் வருவாய் குறித்து இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்து அதன்காரணமாக டாஸ்மாக்கிற்கு வருவாய் குறைந்தால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் தவறான இடத்தில் மது குடிப்பதால், டாஸ்மாக்கிற்கு வருவாய் குறைகிறதா என்பதை கண்டறிவது அவசியம் என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.