ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் – நடிகர் ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீண்ட நெடிய காலமாக ரசிகர்கள் மத்தியிலும், தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு விஷயம் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி தொடக்கம் குறித்ததாகத்தான் இருக்கும். பல்வேறு தரப்பினரும் ரஜினி இப்போது…

நீண்ட நெடிய காலமாக ரசிகர்கள் மத்தியிலும், தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு விஷயம் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி தொடக்கம் குறித்ததாகத்தான் இருக்கும். பல்வேறு தரப்பினரும் ரஜினி இப்போது கட்சி தொடங்குவார், அப்போது தொடங்குவார் என ஆருடம் தெரிவித்து வந்த நிலையில் மவுனியாகவே இருந்து வந்தார் ரஜினிகாந்த்.

பல்லாண்டுகளாக நீண்டு வந்த இந்த எதிர்பார்ப்புக்கு இன்றைய தினம் விடை கிடைத்திருக்கிறது. 2021 ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 31ல் கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பும், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி, மத, சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம், அற்புதம், அதிசயம் நிகழும், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல”என குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதால், ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply