இந்திய வம்சாவழியை சேர்ந்த கீதாஞ்சலி ராவை 2020ம் ஆண்டுக்கான சாதனை சிறுமியாக டைம் இதழ் சிறப்பித்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஒவ்வொரு ஆண்டும் டைம் இதழ் சிறப்பித்து வருகிறது. அந்தவகையில் இந்திய வம்சாவழியை சேர்ந்த கீதாஞ்சலி ராவுக்கு “Kid of the year’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. 15 வயதான இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர்.
இணையத்தில் பயனர்களுக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களை கண்டறியும் விதமாக செயலி ஒன்றை கண்டுபிடித்தார். அதேபோல் தண்ணீரின் சுத்தத்தை அறிந்து கொள்ளும் வகையிலான செயலி ஒன்றையும் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டைம் இதழின் இந்த இடத்துக்காக சுமார் 5,000 பேர் போட்டி போட்டுள்ளனர். இதில் கீதாஞ்சலியே வெற்றி பெற்றுள்ளார்.
இதற்காக டைம் இதழ் சார்பில் Zoom வழியாக கீதாஞ்சலி ராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி இந்த கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது கீதாஞ்சலி ராவ், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் செய்த சிறப்பான பணிகளை தெளிவாக விளக்கியுள்ளார்.







