சந்திரயான் விண்கலம் இரண்டின் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சந்திரயான் விண்கலம் இரண்டு இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டின் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் விண்கலம் 2 அடைந்த து. எனினும் நிலவில் இறங்குவதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரயான் 2 விண்கலமானது லேண்டர் விக்ரமுடனான தொடர்பை இழந்தது.
எனினும் இந்த விண்கலத்துக்கு ஒரு ஆண்டு ஆயுள் இருந்ததால் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து இயங்கியது. தூரத்திலே இருந்து நிலவை கண்காணித்து நிலவின் சுற்றுப்பாதையில் பல படங்கள் மற்றும் பல அறிவியல் தரவுகளை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு விண்கலம் அனுப்பி உள்ளது. குறிப்பாக துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சுமார் 1,056 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பின் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் 2 அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உட்பட நான்கு இணையதளங்களில் இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.







