சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக, பெங்களூரு பௌரிங் அரசு மருத்துமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சசிகலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டாவது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மூச்சுத்திணறல் குறைந்து, சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. எனினும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சசிகலா உடல்நிலை குறித்து, பௌரிங் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக கூறினார். சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை என்றும், ஆனால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். இதற்கிடையே, சசிகலா சிகிச்சை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பௌரிங் அரசு மருத்துவனை தலைவர் மனோஜ்குமார், சசிகலாவுக்கு காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், தற்போது எந்த பயமும் இல்லை என்றும் கூறினார். சசிகலாவின் நுரையீரல் செயல்பாடு இன்று முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக, பௌரிங் அரசு மருத்துவமனையில் இருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆதரவாளர்களை பார்த்து கை அசைத்தார்.







