ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
காரல் மார்க்ஸின் நண்பர் ஏங்கல்ஸின் 200 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என கூறும் பாஜக., ஒரே கட்சி ஆட்சி என்ற நிலையை நோக்கி செல்வதாகக் குறிப்பிட்டார்.
இது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்து என்று கூறிய அவர் இதற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் முத்தரசன் கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு யுத்தம் நடத்துவதாகக் கூறிய முத்தரசன், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் உறுதிபடக் கூறினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தில் திமுகவுக்கு உடன்பாடும் இல்லை தெரிவித்தார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு திமுகவின் போராட்டத்தலேயே வழங்கப்பட்டடதாக அவர் குறிப்பிட்டார்.







