இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்வி புரட்சி தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கொரோனா தொற்றினால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்வதற்காகவே இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் பள்ளி முடிந்த பிறகு மாலை ஒரு மணி நேரம் தன்னார்வலர்களை கொண்டு, மாணவர்களின் வீட்டின் அருகிலேயே கல்வி கற்றுத்தரப்படும் எனக்கூறினார். இத்திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் மிகப்பெரிய கல்வி புரட்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் எனவும் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், யார் படிக்க வேண்டும் யார் படிக்க கூடாது என்பதை மாற்றியது திமுகதான் என பெருமிதம் தெரிவித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இத்திட்டத்தில் பங்குபெறலாம். அரசு அவர்களை வரவேற்கிறது என கூறினார்.







