ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை மு.க.அழகிரி இன்று காலை சந்தித்தார். தயாளு அம்மாளின் உடல்நலத்தை கேட்டறிந்த அழகிரி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, திமுகவில் இருந்து எந்த அழைப்பும் தமக்கு வரவில்லை என்றும், திமுகவுடன் சேர்ந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பில்லை என்றும் விளக்கமளித்தார்.
மதுரையில் ஜனவரி 3ம் தேதி நடைபெறும் ஆலோசனைக்கு பிறகே தமது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்றும் கூறினார். தமது ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி கூட தொடங்குவேன் என்று குறிப்பிட்ட அழகிரி, ரஜினியை கட்டாயம் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என கூறிய அவர், ஓட்டு போடுவதும் பங்களிப்பு தான் என தெரிவித்துள்ளார்.







