அஸாமில் தனி ஒருவராக மரங்களை நட்டு தற்போது காட்டையே உருவாக்கியுள்ள ஜாதவ் பெய்ங் என்பவரின் கதை அமெரிக்காவின் ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
அஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் ஜாதவ் பெய்ங். சூழலியல் ஆர்வலரான இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள 550 ஏக்கர் நிலப்பகுதியில் மரங்களை நட்டு வந்தார். இவரின் இந்த இடைவிடாத முயற்சி தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் வளர்ந்து ஒரு அடர்ந்த காடாக உருமாறியுள்ளது. அந்த காட்டில் இப்போது யானைகள், மான், காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் பல விலங்குகள் வசித்து வருகின்றன.
ஜாதவ் பெய்ங்கின் இந்த சாதனை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவரின் இந்த காடு வளர்ப்பு கதை ஃபாரஸ்ட் மேன் ஆஃப் இந்தியா என்ற தலைப்பில் அமெரிக்காவின் ஆறாம் வகுப்பு பாடபுத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரிஸ்டல் கனெக்டிகட்டில் உள்ள கிரீன் ஹில்ஸ் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் இப்போது தங்கள் சுற்றுச்சூழல் பாடத்தின் ஒரு பகுதியாக பத்மஸ்ரீ ஜாதவ் பயெங் பற்றி படித்து வருவதாக பகிர்ந்து கொண்டார்.
இந்த பாடத்தை சேர்ப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி சரியான வகையில் அணுகினால் அந்த நபர் எத்தைகைய தடைகளையும் தாண்டி சாதிக்க முடியும் என்பதை எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரி வைப்பதாகும் என தெரிவித்துள்ளார்.
ஜாதவ் பயொங்கின் கதை அமெரிக்க பாடபுத்தகத்தில் இடம்பிடித்ததற்கு அஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜாதவ் எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழலைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதனுடன் அவர்கள் இணைந்து செயல்படவும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.







