இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸின் வெற்றியை தமிழக மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர். தற்போது அவரது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவில் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை படித்து முடித்துள்ளார். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் ஆலோசனை வழங்குவதில் இவருக்கு 15 வருட அனுபவம் இருக்கிறது. இவர் கமலா ஹாரிஷின் ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்க செனட் சபை, அதிபர் தேர்தல் பிரச்சார வேலைகளுக்கான ஆலோசகராக இருந்துள்ளார்.
இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மகளிர் மன்றம் சார்பில் அவருக்கு Rising star விருது வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வேறு சில தொண்டு நிறுவனங்களும் அவரை சிறப்பித்துள்ளன. வேறு சில அமைப்புகளிலும் அவர் உயர் பதவிகளை வகித்துள்ளார். ரோஹினி கொசோக்லு அமெரிக்காவில் உள்ள பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பதில் திறமையானவர் என கமலா ஹாரிஸ் பாராட்டியுள்ளார்.







