ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் சாஹோ, ராதே ஷ்யாம் என பான் இந்தியா திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். இதற்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சயீஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆதிபுருஷ் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள்.இதனைத் தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தின் சில காட்சிகள் மீண்டும் கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு படத்தின் புதிய டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆதிபுரூஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனை வரவேற்றும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.







