தனியார் கிளினிக்கில் ஊசி போட்டு கொண்ட இளைஞர் உயிரிழப்பு!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பின் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம், எம்.எஸ்.முத்து நகர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 31) கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் உடல்நிலை சரியில்லை என தனது தாயாரிடம் கூறி, கன்னிகா புரம் பிரைட்டன்ஸ் சாலையில் உள்ள தனியார் கிளினிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் இரவு 9 மணியளவில், புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனை முன்பு வினோத்குமார் மயங்கிய நிலையில் இருப்பதாக அவரது தாயாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அவரது அண்ணன் சதீஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வினோத் குமார் ஏற்கனவே தெரிவித்தனர். இதுகுறித்து, வினோத் குமாரின் அண்ணன் சதீஷ் குமார் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனியார் கிளினிக்கில் ஊசி போட்ட பின் தனது தம்பியின் உடல் நிலை மோசமடைந்ததாகவும், சிகிச்சையில் தவறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.